வெள்ளி, 25 ஜனவரி, 2013

விஸ்வரூபம்... 29-ம் தேதி வரை படம் கிடையாது!

ஹைதராபாத் / பெங்களூர்: ஆந்திர அரசின் உத்தரவைத் தொடர்ந்து கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படத்தை பாதியில் நிறுத்தி, ரசிகர்களுக்கு டிக்கெட் பணத்தைக் கொடுத்து அனுப்பினர் தியேட்டர்காரர்கள். வரும் 29-ம் தேதி வரை படத்தை வெளியிட வேண்டாம் என்றும் தியேட்டர்களை போலீஸ் கமிஷனர் கேட்டுக் கொண்டுள்ளார். பெங்களூரிலும் விஸ்வரூபம் படம் பாதியில் நிறுத்தப்பட்டு, ரசிகர்கள் வெளியேற்றப்பட்டனர். பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ள விஸ்வரூபம், மீலாடி நபி விழாவான இன்று வெளியாவதாக இருந்தது. முஸ்லிம்கள் எதிர்ப்பால் தென்னிந்தியாவில் தமிழகம், புதுவையில் இந்தப் படம் தடை செய்யப்பட்டுவிட்டது. ஆனால் மற்ற மாநிலங்களில் வெளியாக தடை ஏதும் இல்லை. ஆனால் இன்று வெள்ளிக் கிழமை, மீலாடி நபி என்பதால், கர்நாடகம், ஆந்திரத்தில் இந்தப் படத்தை வெளியிட தயக்கம் ஏற்பட்டது விநியோகஸ்தர்களுக்கு. இதைத் தொடர்ந்து கர்நாடகத்தில் படத்தை விநியோகஸ்தர்கள் வெளியிடாமல் நிறுத்திவிட்டனர். ஆந்திராவில் சில முஸ்லிம் தலைவர்கள் உள்துறை மந்திரி சபிதா இந்திரா ரெட்டியை சந்தித்து, விஸ்வரூபம் படத்தில் உள்ள காட்சிகளால் எந்த பிரச்சினையையும் உருவாக்காது என்று திருப்தி அடையும் வரை திரையிட அனுமதிக்கக்கூடாது என்று கோரிக்கை விடுத்தனர். ஹைதராபாத் நகரில் காலையில் எந்தத் தியேட்டரிலும் விஸ்வரூபம் ஓடவில்லை. பிற்பகலில் படத்தை திரையிட்டனர். ஆனால் திடீரென காவல் துறையிடமிருந்து ஒரு உத்தரவு வந்தது, அனைத்து திரையரங்குகளுக்கும், படத்தை உடனே நிறுத்துமாறும், மறு உத்தரவு வரும் வரை விஸ்வரூபத்தை திரையிடக் கூடாது என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது. இதனால் அனைத்து தியேட்டர்களிலும் உடனடியாக படம் நிறுத்தப்பட்டு, ரசிகர்களுக்கு டிக்கெட் பணம் திரும்பத் தரப்பட்டது.


இதேபோல் சைபராபாத்தில் 29-ம் தேதி வரை படத்தை ரிலீஸ் செய்வதை ஒத்திவைக்கும்படி தியேட்டர் உரிமையாளர்களை போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். எனவே ஜனவரி 29-ம் தேதி வரை ஹைதராபாதில் படம் கிடையாது. ஆனால் ஆந்திரா - தமிழக எல்லைப்புற பகுதிகளில் உள்ள அரங்குகளில் விஸ்வரூபம் ஓடுவதாகக் கூறப்படுகிறது. பெங்களூரில்... பெங்களூரில் இன்று பிற்பகல் சில அரங்குகளில் விஸ்வரூபம் வெளியானது. ஆனால் படம் திரையிடப்பட்ட சில நிமிடங்களில் நிறுத்தப்பட்டு, டிக்கெட் பணம் திருப்பித் தரப்பட்டது. மாலை அல்லது நாளை படம் திரையிடப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. போலீசாருடன் ராஜ்கமல் நிறுவனம் பேச்சு... இந்த நிலையில், காட்சிகள் ரத்து செய்யப்பட்டது குறித்து சம்பந்தப்பட்ட நகரங்களில் காவல் துறை அதிகாரிகளுடன் ராஜ்கமல் நிறுவனம் பேச்சு நடத்தியது. ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும், அரசின் உத்தரவுக்கேற்பவே போலீஸ் செயல்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக